"இனி முதலமைச்சருக்கு தூக்கம் வராது" ஜெயக்குமார் தகவல்!

"இனி முதலமைச்சருக்கு தூக்கம் வராது" ஜெயக்குமார் தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிவரும் காலங்களில் தூக்கமில்லாத ஓர் இரவாகதான் அமையும் என முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்தான மாநாட்டு தீர்மானக் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி பொன்னையன், செம்மலை, ஓ எஸ் மணியன், பென்ஜமின், நா பாலகங்கா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "செந்தில் பாலாஜி விவகாரத்தில் இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம். தப்பு செய்தவர் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அமைச்சர் என்கிற வளையத்தில் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைக்கின்றனர். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் யாரெல்லாம் சிக்குவார்கள் என நினைத்தார்களோ, அவர்களெல்லாம் இந்த விசாரணையை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  செந்தில் பாலாஜி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் கண்டிப்பாக பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் நிலை ஏற்படும். என்னை தூங்கவிடாமல் செய்வதாக முதலமைச்சர் கூறியது போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிவரும் காலங்களில் தூக்கமில்லாத ஓர் இரவாகதான் அமையும். முன்னாள் நிதியமைச்சர் ஆடியோவில் கூறியது போல் அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். மர்மதேசம் போல் இனிவரும் நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என தெரிவித்தார். 

மேலும், வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெறுவதெல்லாம் அரசாணைக்கு அப்பாற்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளார். வேலைவாய்ப்பின்மையை போக்க நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் கட்டிடங்கள் திறக்கும் பொம்மை முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். செந்தில் பாலாஜி தனிப்பட்ட முறையில் செயல்பட்டார். அதனால் தான் அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா அவரை விடுவித்தார். அவர் செய்த ஊழலுக்கும் அதிமுகவிற்கும் தொடர்பு இல்லை" என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com