ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது இவர் கொண்ட பிரியம் காரணமாக, ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க : குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறப்பு...!

இதேபோல் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், சாமிநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மேலும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் நேருவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் திரளான காங்கிரஸார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, இந்தியாவை மறு உருவாக்கம் செய்தவர்தான் ஜவஹர்லால் நேரு என புகழாரம் சூட்டினார்.