அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...நிறுத்திய மாவட்ட ஆட்சியர்...அதிருப்தி அடைந்த கிராம மக்கள்...!

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...நிறுத்திய மாவட்ட ஆட்சியர்...அதிருப்தி அடைந்த கிராம மக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த குவிந்த மக்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கே?:

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் தமிழக அரசு அனுமதியுடனும் வருடாந்தோறும் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். ஏனென்றால், புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகப்படியான வாடிவாசல் உள்ளது. அதேபோல் இங்கு தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம். 

இதையும் படிக்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டம் வாரியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை இதோ... !

தமிழக அரசு அனுமதி:

அதன்படி, இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது, அதற்காக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தை பார்வையிட்ட போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி தற்காலிகமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஒத்தி வைத்து மாற்று தேதியில் நடத்திக் கொள்ள அறிவுறுத்தினர். 

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்:

முன்னதாக  வாடிவாசலில் களம் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் வந்த நிலையில், போட்டி ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கிராம மக்களும் ஏமாற்றமடைந்தனர். இதனால், ஜல்லிக்கட்டு விழா குழுவினரும் கிராம மக்களும் குறிப்பிட்ட நாளில் போட்டி நடத்த வேண்டும் என்று கூறி வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, வாடி வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது, எந்தவித அசாம்பாவிதமும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக  200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.