மின்சாரத்திற்காக 400 தலைமுறைகளை அழிப்பதா..? கூடங்குளம் அணு உலைகள் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு...

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணு உலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரத்திற்காக 400 தலைமுறைகளை அழிப்பதா..? கூடங்குளம் அணு உலைகள் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு...
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இந்த அனுமின் நிலையத்தில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் வகையில், 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான கான்கிரீட் போடும் பணிகளை நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
ஏற்கனவே முதல் அணுஉலை 70 நாட்களுக்கு மூடப்பட்டிருப்பதாகவும், வருடாந்திர பராமரிப்பு என்று அந்த உலை ஓடும் நாட்களை விட நிற்கும் நாட்கள் தான் அதிகமாக இருக்கக் கூடிய சூழலில், இரண்டாவது அணு உலையிலும் தொடர்ந்து பழுது ஏற்பட்டு மே மாதம் மட்டுமே மூன்று முறை அடைத்து வைத்திருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த நிலையில் திடீரென ஐந்தாவது ஆறாவது அணு உலைகளுக்கு தொடக்க நிகழ்வுகள் நடத்துவதை கண்டிப்பதாகக் கூறியுள்ளனர்.  
 
மக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய அணு உலையின் புதிய விரிவாக்க பணிகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 40 ஆண்டுகளுக்கான மின்தேவைக்காக அடுத்து வரும் 400 தலைமுறைகளை அழிப்பதா எனவும் சாடியுள்ளனர்.