ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும் எதுவும் செய்யவில்லை... நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும் எதுவும் செய்யவில்லை... நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு...

மழை வெள்ள இடர்பாடுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தான் காரணம் என குற்றம் சுமத்தும் தி.மு.க. தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாத காலமாக எதையும் செய்யவில்லை என நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதனை கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் தலைமையில், பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும் எனவும், இல்லையென்றால்  மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து மிகப்பெரிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகரத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் பயணிகக முடியாத அளவில் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளின் அவல நிலையால் பால், சிலிண்டர் போடுபவர்கள் பயணிக்க முடியாத சூழலால் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அதிக விலை கேட்கும் நிலை உள்ளது.

மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலைகளை உடனடியால சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்கள் வியாபாரிகள் அனைத்து கட்சியினரை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பு பணிகளை தமிழக அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகபடியாக பெய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழக அரசு கூடுதல் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என கேட்டு கொண்டார்.

வெள்ள பாதிப்புக்கு காரணம் அதிமுக அரசு என தமிழக அரசு குற்றம் சுமத்துகிறது.ஆட்சி பொறுப்பேற்று தமிழக அரசு 6 மாத காலத்தில் எந்த பணிகளும் சரிவர செய்யவில்லை. 6 மாத காலத்தில் அதிமுக அரசு செய்யாத பணிகளை திமுக அரசு  செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு பணிகளை தமிழக அரசு முறையாக செய்யவில்லை என்றால் வரும் நகர்மன்ற தேர்தலில் எதிரொலிக்கும் திமுகவிற்கு பாதகமாகும் என அவர் தெரிவித்தார்.