விசாரணைக் கைதி உயிரிழப்பு : ஆஞ்சியோ செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டாரா? 

விசாரணைக் கைதி உயிரிழப்பு : ஆஞ்சியோ செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டாரா? 

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தமைக்காக கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீரென உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரிழந்த நபரின் கிராமம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை(53). இவர் அப்பகுதியில்  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கப்பதற்காக பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் நேற்று போலீசார் சின்னதுறையிடம் சோதனைத்தபோது குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக அவர் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சின்னத்துரை மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் ஆகிய இருவரை  கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 77 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க : மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை எப்போது வழங்கப்படும்?

இந்நிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சின்னத்துரைக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறை காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னத்துரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தற்போது உயிரிழந்த சின்னத்துரைக்கு கடந்த மாதம்   இருதய ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இருந்த நிலையில் தான் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவரின் சான்றிதழையும் பெற்று பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு  முன் இருதய ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட நபர் எவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டார்? இதில் ஏதேனும் தவறு நடந்துள்ளது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.