எங்களை விமர்சனம் செய்யும் உரிமை பா.ம.க.வு.க்கு இல்லை... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.கவினர் தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு பெரும் இழப்பு என்றும், அதிமுகவை விமர்சனம் செய்யும் உரிமை பா.ம.கவிற்கு இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எங்களை விமர்சனம் செய்யும் உரிமை பா.ம.க.வு.க்கு இல்லை... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி,  ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், மா.பா.பாண்டியராஜன், உடுமலை ராதாகிருஷண்ணன், சேவூர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது  கட்சியின் முடிவு என்றும், இழப்பை பொறுத்தவரை பா.ம. கவிற்கு தான் தவிர அதிமுகவிற்கு இல்லை என தெரிவித்தார்.

மேலும், கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது அவர்களின் முடிவு என கூறிய அவர், ஆனால் அதிமுகவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவை விமர்சனம் செய்தால் நாங்களும் பா.ம.கவை விமர்சனம் செய்வோம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எழுதப்படாத ஒப்பந்தம் போல் யாருடனாவது சேர்ந்து இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து உள்ளதாகவும், ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை மொட்டை அடித்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கான தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு தெரியும் என கூறிய அவர், மக்கள் எங்களோடு இருக்கும் வரை எங்களுக்கு எந்த காலத்திலும் இழப்பு கிடையாது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை அதிமுக பெறுவோம் எனவும் உறுதியளித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் உள்ள நிலையில் அதனை பூசி மறைக்கும் வகையாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவிப்பதாக விமர்சனம் செய்தார்.

திரைப்படத்தில் ஜாலியாக நடித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சட்டமன்றத்தில் அமர வைத்தால் எப்படி மக்களின் பிரச்சினைகள் தெரியும் என கேள்வி எழுப்பிய அவர், அதனை அறிந்து சட்டமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், தற்போது சேப்பாக்கம் சேகுவாரா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.