உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும்... அமைச்சர் சேகர்பாபு பேட்டி...

உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும். தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சோதனை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும்... அமைச்சர் சேகர்பாபு பேட்டி...

சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்துகொண்டிருக்கிறது. கோசாலைகள், குளங்கள், தேர்கள் போன்றவற்றை பராமரிக்க வேண்டும் , இது குறித்தான குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளோம் இதுவரை 80 கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் ஆய்வு செய்து, குடமுழுக்கு பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 35 வயது கடந்தவர்கள் 75 பேர் உள்ளனர்.

இதனால் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலில் நியமனம் செய்யப்படும். அதில், முறையாக ஆகம விதிகளின்படி நியமிக்கப்பட உள்ளனர் என்றார். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இல்லங்களில், இடங்களில் சோதனை என்பது உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். அவர் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும்.

மக்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியாக தெரியவில்லை. மடைமாறி சென்றவர்களை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும், காமாலை நோய் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள் நிறமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.