விசாரணை கைதிகளிடம் இரவு நேரத்தில் விசாரிக்க தடை...டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

விசாரணை கைதிகளிடம் இரவு நேரத்தில் விசாரிக்க தடை...டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில், காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் சிலர் அடித்து துன்புறுத்தப்பட்டு, போலீசாரால் கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் திருவண்ணாமலையை சேர்ந்த தங்கமணி என்பவரை சாராயம் விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் லாக்-அப்பில்  உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை மறைமலைநகரில், வாகன தணிக்கையின் போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற விக்னேஷ் என்பவரும் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியதை அடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சிலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இந்தநிலையில், இதுபோன்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவலில் வைத்து விசாரிக்க கூடாது என அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.