இன்று முதல் காணொலி மூலம் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை தொடங்கி விட்டதால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இன்று முதல் காணொலி மூலம் விசாரணை நடத்தப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

இன்று முதல் காணொலி மூலம் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகளின் விசாரணை நேரடியாக இல்லாமல் காணொலி காட்சி வழியே நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா பாதிப்புகள் குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நீதிமன்றங்களில் இன்று முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடத்தப்படும் என, கடந்த மாதம் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் காணொலி மூலம் வழக்கு விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நேரடி விசாரணை என்ற அறிவிப்பானது, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.