சாதிய பாகுபாடுகள் இன்றி சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

சாதிய பாகுபாடுகள் இன்றி சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

எவ்வித சாதிய பாகுபாடுகள் இன்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு.

75-ஆவது சுதந்திர தின விழா..! 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவிடைவதை ஒட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாப்பட உள்ளது. இதற்காக நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் உள்பட அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நமது மரபு:

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர தினத்தில் சென்னை தலைமைச்செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: வீட்டுச் சுற்றுச்சுவரை தேசியக்கொடியாக்கிய முன்னாள் இராணுவ வீரர் !!

குற்றம்:

ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறக்கூடும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 17இன் படி தீண்டாமையில் ஈடுபடுவது தண்டைக்குரிய குற்றம் என்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச்சட்டப்படி, பட்டியலின மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்,  அலுவலர்கள் என எவரையும் பணி செய்யவிடாமல் தடுப்பதோ, அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதியப் பாகுபாடின்றி கொடியேற்றம்:

இதனை கருத்தில் கொண்டு, வரும் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில், எவ்வித சாதியப் பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் : தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு !!

கிராமசபைக் கூட்டம்:

அதேபோல், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித சாதியப்பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.