43 இடங்களில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை... விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலமாக, சொத்துக் குவிப்புக்காக வழக்கை சந்திக்கும் 4வது முன்னாள் அமைச்சராகிறார் இவர். முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பாய்ந்தது. தற்போது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.