தொழில்நுட்ப வசதியால் தடுத்து நிறுத்தப்பட்ட கடத்தல் சிலை விற்பனை..!

பாரிஸில் விற்பனை செய்யப்படயிருந்த சிலையை தமிழ்நாட்டில் இருந்து தடுத்து நிறுத்திய டிஜிபியை மத்திய அமைச்சர் பாராட்டியுள்ளார்.

தொழில்நுட்ப வசதியால் தடுத்து நிறுத்தப்பட்ட கடத்தல் சிலை விற்பனை..!

ஸ்டாப் ஆக்சன்

கடத்தல் 500 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலையை பாரிஸில் உள்ள தனியார்  விற்பனை இணையதளம் மூலம் விற்பனை செய்ய முயன்றதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சமூக வலைதளப் பதிவின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.

பாரீசில் உள்ள கிறிஸ்டி என்ற ஆன்லைன் இணையதள மூலம் 500 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்கான விளம்பரத்தை வெளியிட்ட தகவல் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி கவனத்திற்கு வந்தது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்  "ஸ்டாப் ஆக்சன்" ஏலத்தை நிறுத்துங்கள் சிலையை தங்களிடம் திரும்ப ஒப்படையுங்கள் என தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இணையத்தில் பதிவு

குறிப்பாக பாரிஸில் உள்ள கிறிஸ்டி இணையதள பக்கத்தை இணைத்து, 500 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலையின் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம்  கோவில்பட்டி தாலுகாவில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வர சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலை எனவும் அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி  தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவின் அடிப்படையில் உடனடியாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாடு அரசின் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரான்ஸ் தூதரகம் மூலமாக கிறிஸ்டி விற்பனை அருங்காட்சியகத்தை அணுகியுள்ளனர்.

அதிரடி நடவடிக்கை

குறிப்பாக இந்த சிலையை வெளிநாட்டு மதிப்பில் 2 லட்சம் முதல் மூன்று லட்சம் யூரோ என விலை நிர்ணயித்து ஏலம் விடுவதற்கான விளம்பரத்தை செய்திருந்தது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில்
1.76 முதல் 2.64 கோடி ரூபாய் ஏலத்தை அறிவித்திருந்தது

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளியின் அதிரடியான நடவடிக்கை மூலம் உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டதால் ஏலம் நிறுத்தப்பட்டதாக பிரான்சில் உள்ள இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி இடம் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன் திருடிய சிலை

இதுபோன்ற சிலைகள் கடத்தப்படும் பொழுது கடத்தல் காரர்களை கண்டுபிடித்து சிலைகள் இருக்கும் இடத்தை அறிந்து மீட்டு வருவது நீண்ட காலம் எடுக்கும் எனவும், கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாட்டு அருங்காட்சியத்தில் இருக்கும் பட்சத்தில் யுனெஸ்கோ ஒப்பந்த விதிப்படி திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இந்த நடராஜர் சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பாக  1972 ஆம் ஆண்டு திருநெல்வேலி கோவில்பட்டி கோதண்டராமேஸ்வர கோவிலில் இருந்து திருடப்பட்டதையும், அது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது கிறிஸ்டி என்ற விற்பனை தளத்தில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை
 
மேலும் இந்து அறநிலையத்துறை ஆவணத்தின் அடிப்படையிலும் , பிரெஞ்சு இன்ஸ்டியூட் ஆப் பாண்டிச்சேரி உள்ள புகைப்படத்தின் அடிப்படையாக வைத்தும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டில் இருந்த சிலை என்பதையும் உறுதி செய்து, கடத்தப்பட்ட நடராஜர் சிலையை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: என்னிடம் தான் அனைவரும் கோரிக்கை வைப்பார்கள் ஆனால் முதலமைச்சராகிய நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்..!

மத்திய அமைச்சர் பாராட்டு

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 500 ஆண்டுகால பழமையான நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதை தடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.