தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் மற்றொரு கை காவல்துறை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !!
தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும் சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

சிறந்த புலனாய்வு, தீரச் செயல் புரிதல் ஆகியவற்றுக்காக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு வீர தீர செயல் புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றம் நடைபெறாத மாநிலமாக தமிழ்நாடு மாற காவல்துறையினர் பணியாற்ற வேண்டும் என கூறினார். ஒரு காவலர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்பதை உணரவேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் இல்லாமலும், எந்த வன்முறையும் உருவாகாமலும் பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டுகொண்ட முதலமைச்சர், திட்டமிட்டு வன்முறை ஏற்படுத்துபவர்களை கண்டறிந்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும் சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.