மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உற்சாகமாக உழைப்பேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொண்டர்களின் நல்வாழ்த்துகளுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உற்சாகமாக உழைப்பேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மார்ச் - 1, தனது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொடர் வெற்றி கிரிக்கெட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்ஸர்’ அடித்தது போன்ற வெற்றி என்று கூறியுள்ளார்.

பிறந்தநாளையொட்டி  ‘உங்களில் ஒருவன்’ என்கிற சுய சரிதைப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட உள்ளதாகவும், தனது புத்தகத்தை வாங்கிப் படித்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.  அதுதான் அடுத்த பாகத்தை எழுத ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

நம் பயணம் என்பது தமிழ் உணர்வுக்கானது, சமுதாய உரிமைக்கானது. தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கானது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய பிறந்த நாளையொட்டி, நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது எனவும் மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள் என அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட தொண்டர்களின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதி ஏற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.