வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்...முதலமைச்சர்.!!

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்...முதலமைச்சர்.!!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல்  எழுதவும், பேசவும் தெரியாது என்றும், அனைத்தையும் தாம் முயன்று பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

மக்கள் எவ்வளவு  உயரத்திற்கு தன்னை வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தனது சுயசரிதை புத்தகத்திற்கு உங்களில் ஒருவன் என பெயரிட்டதாக தெரிவித்தார்.   

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் தாம் அரசியல் பயிராக வளர்ந்தேன் என்பது இந்த புத்தகத்தை படிக்கும் போது தெரியும் என்றும், மிகச்சிறிய வயதிலேயே குறிக்கோளை தீர்மானித்து பயணிப்பதற்கு எடுத்துக்காட்டாக தாம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

தாம் பள்ளி மாணவனாக இருந்த போது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது என்றும் தற்போது நீட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது எனவும் மு..க.ஸ்டாலின் தெரிவித்தார். 

கோபாலபுரத்தில் உள்ள ஒரு அறையாகத்தான் சிறை  இருந்ததாகவும், அந்த சிறை தான் தம்மை செதுக்கியதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின், கோபாலபுரம் வீடு என்பது, தமிழகத்தின் நிரந்தர அரசவை என்றும், அதுவே தம்மை உருவாக்கியதாகவும் கூறினார். 

நாடாளுமன்றத்தில் கூட்டாட்சி தத்துவம் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் ராகுல் காந்தி பேசியதை சுட்டிக் காட்டிய அவர், மாநில உரிமை பறிக்கப்படுவதை தடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.