"அவதூறு அண்ணாமலை என்று பெயர் வைத்ததே நான்தான்" துரை வைகோ பேச்சு!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவதூறு அண்ணாமலை என பெயர் வைத்ததே நான்தான் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.  

பெரியார் 145-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முதன்மை செயலாளர் துரை வைகோ, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் உள்ள  பெரியார்  திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது,  அவதூறு அண்ணாமலை என்று முதலில் அவருக்கு பெயர் வைத்ததே நான்தான்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வீட்டு வாடகை முதற்கொண்டு ஸ்பான்சர் செய்து விடுகிறார்கள். தொடர்ந்து அவதூறு செய்திகளை அண்ணாமலை பரப்புகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தை தமிழக மக்கள் அவருக்கு கற்பிப்பார்கள் எனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநாட்டிலும் கூறியிருந்தேன் என்னுடைய விருப்பம் தேர்தலில் நிற்பது இல்லை. சென்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமை, எங்கள் இயக்கத்தினர் மற்றும் மக்கள் விரும்பிய பொழுதும் எனக்கு பதிலாக டாக்டர் ரகுராமனை தான் வேட்பாளராக நிற்க வைத்தேன். என்னை பொருத்தவரை தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. சாதாரண ஒரு தொண்டனாக இருக்கிறேன், இருப்பினும் கட்சி தலைமைக்கு கட்டுப்படுகிறேன் எனக் கூறினார். 

மேலும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா கூறி இருக்கிறார். வாய்க்கு வந்தாற்போல் பேசுவது வரலாறை திரித்து பேசுவது என்று அண்ணாமலைக்கு மட்டும் கிடையாது. பாஜகவில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறைகளிடம் வரலாறை தவறாக கூறி திசை திருப்பப் பார்க்கிறார்கள். நாம் இன்று படித்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு பெரியாரும் அண்ணாவும் தான் காரணம். இவர்கள் குலக்கல்வி என்று குல தொழிலை புகுத்த பார்க்கிறார்கள் அதனை ஒழித்தது திராவிட கழகம். 50 வருடங்களுக்கு முன்பு சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்கள் பெரியாரும் அண்ணாவும் தான். ஆண்களுக்கு சேவை செய்வேன் பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற மூட சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தான். நம் மாநிலம் முன்னேற அடித்தளம் அமைத்தவர்கள். திராவிட அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவை. திமுக மதிமுக முதற்கொண்டு தடம் மாறிய அதிமுகவையும் சேர்த்துதான் கூறுகிறேன்.  அவர்களுக்கும் இந்த கடமை உண்டு. மதவாத பாஜகவை எதிர்க்க வேண்டிய கடமை இங்கு இருக்கக்கூடிய அனைத்து திராவிட கட்சிகளுக்கும் உண்டு என தெரிவித்தார். 

இதையும் படிக்க:"அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது உண்மையல்ல" டிடிவி தினகரன் பேச்சு!