தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக புகார்தாரர்களின் வாதத்தை கேட்காமல் வழக்கை முடித்து வைத்தது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா என பதில் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை நகல் தமிழக அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம்பெறாதது ஏன் என்றும் புகார் அளித்த அவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,அது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிப்பதற்காக வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க || ஆழ்கடலில் மூழ்கியவர்களின் சடலத்தை கண்டுபுடிக்க, அண்டர் வாட்டர் ட்ரோன்!!