முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீடுகளில் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீடுகளில் சோதனை
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் வெத்தன்விடுலி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக பணிபுரிந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் பணிமாறுதல் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளராக இருந்து முருகானந்தம் உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்று பணி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகானந்தத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் முருகானந்தத்தின் சொத்து மதிப்பு பெருமளவு உயர்ந்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி சோதனை நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் முருகானந்தம் வாங்கிய வணிக வளாகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com