வங்கி உதவி மேலாளர் கொரோனா தொற்றால் மரணம்... ஆக்சிஜன் குழாயில் கசிவு காரணமா..? உறவினர்கள் குற்றச்சாட்டு...

நாகை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக தனியார் வங்கி உதவி மேலாளர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வங்கி உதவி மேலாளர் கொரோனா தொற்றால் மரணம்... ஆக்சிஜன் குழாயில் கசிவு காரணமா..? உறவினர்கள் குற்றச்சாட்டு...
நாகூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 12ம் தேதி அவருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கொரோனா வார்டில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக நோயாளிகள் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
 
ஆனால் சிகிச்சையில் இருந்த ராஜேஷ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதனிடையே, அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வந்ததாகவும், ஆக்சிஜன் கசிவு காரணமாக சப்ளை நிறுத்தப்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
 
இந்தநிலையில் இதுகுறித்து நேரில் விசாரணை நடத்திய நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ், பின்னர் அளித்த பேட்டியில், ராஜேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறினார். தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.