செய்தியாளருக்கு கொலை மிரட்டல்... இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது...

மோசடி வழக்கில் கைதான இந்து மகாசபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயின் அடியாட்கள், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளருக்கு கொலை மிரட்டல்... இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது...

அகில இந்திய இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், தொழிலதிபர் வெங்கடேசன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அடங்கிய கும்பல், கடந்த 2019ஆம் ஆண்டு அய்யபாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை கடத்தி, அவரது சொத்துக்களை எழுதி வாங்கியது. இதுகுறித்து கோடம்பாக்கம் ஸ்ரீ உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்திருந்த கோடம்பாக்கம் ஸ்ரீயை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 9 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக, எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரின் செல்போனை பறித்து அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஸ்ரீயின் அடியாட்கள், ஒளிப்பதிவாளரிடம் இருந்த கேமராவையும் கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, செல்போன் மற்றும் கேமராவை சேதப்படுத்தியது குறித்து, எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.