எங்களுக்கு தடுப்பூசி போடுங்க... கோரிக்கை விடுக்கும் மலைகிராம மக்கள்...

வெளியூர் சென்றவர்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் தடுப்பூசி போட சொல்லி கோரிக்கை வைத்த மலை கிராம மக்கள்.

எங்களுக்கு தடுப்பூசி போடுங்க... கோரிக்கை விடுக்கும் மலைகிராம மக்கள்...
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நகர்புற மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், கிராமப்புற மக்கள் மத்தியில் தடுப்பூசி ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக மலைசார்ந்த பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்தால், மக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் சம்பவங்களும் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சனூத்து மலைகிராம மக்கள் எங்களுக்கு தடுப்பூசி செலுத்துங்கள் என்று ஆர்வத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 450க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி கிடையாது.
 
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி கேரளா, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதால் தங்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறும் மலைகிராம மக்கள், எங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், நாங்கள் ஓடி ஒளியமாட்டோம், அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
 
ஆர்வத்துடன் இருக்கும் இந்த கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.