” அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கி....” - உயர்கல்விதுறை அமைச்சர்

” அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கி....” - உயர்கல்விதுறை அமைச்சர்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். 

இதில், கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பேராசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்புதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறை செயலர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, கலைக் கல்லூரிகளில் 25% கூடுதலாக இடம் கொடுக்கப்பட்டதன் விளைவாக 1,53,323 இடங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 1,31,173 இடங்கள் நிரம்பியுள்ளன, மீதமுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், சில பாடங்களுக்கான சிலபஸ் மாற்றப்பட உள்ளதாகவும் , இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது ஆய்வுக் கூட்டம் என்பதால் கல்லூரி முதல்வர்களும் சில கருத்துக்களை முன் வைத்துள்ளனர். 4000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி மூலம் விரைவில் நிரப்பபட உள்ளது. மேலும், 1,895 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் ஆணை வெளியிடப்படும் எனவும் 8 பிரிவுகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தகுதியுள்ள பேராசிரியர்களை நியமிக்க குழு அமைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறியுள்ளார். வரும் 23-ம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் மாணவிகளுக்கு சுழற்சி முறை கல்லூரிகளை கொண்டு வந்ததே தாங்கள் தான், அதனால் பெண்கள் கல்வியறிவு உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு கலை கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு ஆண்டு இறுதியில் தாமதமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்தும்  இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் 7 கல்லூரிகளுக்கும் தாங்கள் நிதி ஒதுக்கி கட்டிடங்களை கட்டி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.  

இதையும் படிக்க : நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா..? அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் தோல்விகள் கூறுவதென்ன?!!