ஓபிஎஸ்ஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த  ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பி.எஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக  தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓ.பிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க : வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி...!

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு  வந்தபோது, ஓ.பிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ.பி.எஸ்.  மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும், கேட்டறிந்த நீதிபதி சதீஷ்குமார், எத்தனை முறை இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என  சரமாரியாக ஓபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர் பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஒ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, அதிமுக  கொடி, சின்னம், பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பயன்படுத்துவதை தவிர்க்க சட்ட ரீதியாக உரிய உத்தரவை பெறுவோம் என கூறினார்.