ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் புகார்!!

தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் புகார்!!

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர்.  

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் புகாரளித்துள்ளார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவை தவறான முறையில் சுட்டிக்காட்டி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.