சிறுபான்மை கல்வி நிறுவனம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்...உயர்நீதிமன்றம் உத்தரவு !

சிறுபான்மை கல்வி நிறுவனம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும்...உயர்நீதிமன்றம் உத்தரவு !

தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட பிரிவுகளை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்த விதிகள் சிறுபான்மை பள்ளிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக கூறி, திருச்சி புனித அன்னாள் கன்னியாஸ்திரிகள் திருச்சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிக்க : விரைவில் மதுரையில் மெட்ரோ பணி...நிர்வாக இயக்குனர் அறிவிப்பு!

அந்த மனுவில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் துவங்க அரசு அனுமதி பெற வேண்டும் எனவும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அங்கீகாரத்தை திரும்பப் பெறவும், பள்ளியை நிர்வகிக்கும் அமைப்பின் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கவும்  அரசுக்கு அதிகாரம் வழங்கி இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாக உள்ளதால், இவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும், இந்த விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அமர்வு, 2 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.