நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை  பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காடம்பாடி, நாகூர், வடகுடி, தெத்தி புத்தூர், சிக்கல் கீழ்வேளூர், வேதாரண்யம்  உள்ளிட்ட  பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மற்றும்  டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு  வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.