சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் கனமழை: அச்சத்தில் பொதுமக்கள்...

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் கனமழை:  அச்சத்தில் பொதுமக்கள்...

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் , பிராட்வே, ராயபுரம், கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர், செண்ட்ரல், எழும்பூர், மயிலாப்பூர், திருவான்மியூர்  உள்ளிட்ட பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை ராயபுரத்தில் மழை காரணமாக அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, கொளத்தூர், மாதவரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகனங்களை சீராக இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால், சில பயணிகள் குடை பிடித்தவாறே பயணம் செய்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கனமழை பெய்து வருவதால், மத்தள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்து, கடல் போல் காட்சியளித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்ட பொய்கை அணை, முதன் முறையாக 21 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அந்த காட்சியை கண்டு ரசிக்க பொதுமக்கள் சாரை சாரையாக செல்கின்றனர்.