அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழை...எந்தெந்த இடத்தில் தெரியுமா?

அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழை...எந்தெந்த இடத்தில் தெரியுமா?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

அதிகாலை முதலே தொடங்கிய மழை:

வடகிழக்கு பருவமழை காரணமாக  தமிழகம் முழுவதும் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்தது. இதன் ஒருபகுதியாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கானை, கோலியனூர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாயினர்.

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பண்ணந்தூர், அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் கனமழை பெய்தது. 2 தினங்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. 

இதையும் படிக்க: அவர்களிடம் கருத்து கேட்கவில்லை...அடாவடியாக செயல்பட்டு வருகிறது...ஸ்டாலின் அரசை விமர்சித்த டிடிவி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல், சோழவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொட்டிய மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாயினர். 

இதேபோல், செஞ்சி, அப்பம்பட்டு, ஆலம்பூண்டி, வளத்தி, நாட்டார்மங்கலம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், மாலை 3 மணிக்குமேல் திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.