விடாது வெளுத்து வாங்கிய கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. பின்னா் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. பின்னா் இரவில் கிண்டி, அசோக் பில்லர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அடையாறு, சைதாப்பேட்டை, தியாகராயநகர்,  ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, ராமாபுரம், போரூா், முகலிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். 

சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஐதராபாத், டாக்கா, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சென்னைக்கு வந்த சுமாா் 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. வானிலை சீரானதை தொடா்ந்து விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தறையிறங்கின. அதைப்போல் சென்னையில் இருந்து டெல்லி, ஐதராபாத் திருவனந்தபுரம் உள்பட பகுதிகளுக்கு செல்லக்கூடிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வட தண்டலம், அருகாவூர், தண்டரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினா்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீா்த்தது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆம்பூர் வீஏ கரீம் ரோட்டில் உள்ள தைல மரம் மின்சார கம்பின் மீது உரசியதால் ட்ரான்ஸ்பார்மா் பழுதடைந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மின்வாாிய ஊழியர்கள் மின் இணைப்பை சீர் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ரயில் நிலையம் செல்லக்கூடிய சாலை மற்றும் எம்.பி.எஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. இதன்காரணமாக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. திடீரென பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.