சுருக்குமடி வலை பயன்படுத்துவதில் இரு கிராம மக்களிடையே கடும் மோதல் : படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

சீர்காழி அருகே சுருக்குமடி வலை பயன்படுத்துவதில் இரு கிராம மக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.

சுருக்குமடி வலை பயன்படுத்துவதில் இரு கிராம மக்களிடையே கடும் மோதல் : படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவினர் இந்த நடவடிக்கையை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்து பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள்  தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனையறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றுள்ளனர். தங்களை தடுக்க வருவதை கண்ட திருமுல்லைவாசல் மீனவர்கள் ஃபைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் வானகிரி மீன கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனை அறிந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான நான்கு ஃபைபர் படகுகளுக்கு தீ வைத்து தப்பித்துச் சென்றனர். இதனால் இரண்டு கிராமங்களுக்கு இடையேயும் பதற்றமான சூழல் உண்டானது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், அடிதடியில் ஈடுபட்டவர்களை விரட்டியதுடன், தகராறு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.