ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல....அண்ணாமலை

கோவை குருடம்பாளையம் ஊராட்சி தேர்தலில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல....அண்ணாமலை

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார் . அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் அராஜகம் தலைதூக்க தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக திமுகவை சேர்ந்த கடலூர் மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் இருவர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்   தமிழகத்தில் ஆணவப்படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர் ஒரு வாக்கு பெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கோவை குருடம்பாளையம் ஊராட்சி தேர்தலில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை, அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே என விளக்கமளித்தார். ஆனால் ஊடகங்கள் அவர் பாஜக வேட்பாளர் என பொய்யாக கூறுவதாகவும் தெரிவித்தார்.