பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் - உற்சாக நடனமாடிய இளைஞர்கள்!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கவலைகளை மறந்து உற்சாகமாக நடனமாடினர்.

போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ' நம்ம ஸ்ட்ரீட் ' விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று கொண்டாடப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அறிவித்திருந்தார். அதன் படி இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பங்களா சாலையில் ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் சினிமா பாடலுக்கேற்ப உற்சாக நடனமாடியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாநகரில் முதல் முறையாக நடைபெற்ற ஹாப்பி சன் ஸ்ட்ரீட்  நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் ஹேப்பி சன்  ஸ்ட்ரீட் நிகழ்வு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாநகரில் உள்ள நண்பர்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து மகிழ்ச்சியாக ஆடி பாடி கொண்டாடினர்.

இதையும் படிக்க : கடலூரில் முதல் முறையாக ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி...குஷியில் பொதுமக்கள்!

மதுரையில் நடைபெற்ற  'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. விடுமுறை நாளான இன்று மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட்'  நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி,  அமைச்சர்கள் மூர்த்தி,  பி டி ஆர் பழனி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர். இதில் சிலர் பேரிக்கார்டை தாண்டி உள்ளே விழுந்ததால் கூட்ட நெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது, மேலும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர். இதனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதிலேயே நிறுத்தப்பட்டதால் பெரிதும் எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.