"எடப்பாடி பழனிச்சாமி நன்றி இல்லாமல் செயல்படுகிறார்" H. ராஜா!!

ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தமிழ்நாட்டில் சிதறி கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தொிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், நெருக்கடி காலத்தில் சிறை சென்றவர்களை பாராட்டி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்துக்கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய அவர், "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது எங்களுக்கு நஷ்டம் இல்லை. அதிமுகவிற்குத்தான் நஷ்டம். கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது பாஜக இல்லை, அதிமுக தான்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "1992 இல் இருந்து பாஜக தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. பாஜக திமுகவுடனும் கூட்டணி வைத்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஓட்டுக்கள் சிதறாமல் இருப்பதற்காக அமைக்கப்படுவது. இந்திய அளவில் பாஜக 2014இல் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2014இல் தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். அப்போதே தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி விட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தமிழகத்தில் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி கிடந்ததாகவும், சிதறி கிடந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது பாஜக எனவும் அப்போது எச். ராஜாவும் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிந்து இருந்த அதிமுக தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது பாஜக எனவும் எடப்பாடி பழனிச்சாமி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார் எனச் சாடிய அவர், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.