தலைமைச் செயலகம் எதிரே காவலர் சாலை மறியல்...சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களால் பரபர...!

தலைமைச் செயலகம் எதிரே காவலர் சாலை மறியல்...சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களால் பரபர...!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமிக்கு தவறான சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலகம் அருகே தலைமைக் காவலர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்‌ஷா சிறுநீரக பிரச்சனை காரணமாக,  3 வயது முதல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்குள்ள அரசு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாத்திரைகளின் எதிர்விளைவு காரணமாக பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதால் மீண்டும் குழந்தைகள்  நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி...!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள், சிறுமிக்கு ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறியுள்ளனர். மேலும், பெற்றோர் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு செய்ததன் விளைவாக வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் அரசு  மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடைபெற்றதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமி பிரதிக்‌ஷாவுடன் அவரது தந்தையான தலைமைக் காவலர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் தலைமைச் செயலகம் வெளியே பரபரப்பு ஏற்பட்டது.