ஆட்டுக்கொட்டகையில் நாட்டுவெடிகுண்டுகள்... மர்மநபர்கள் வைத்ததாக நாடகமாடியவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆட்டுக்கொட்டகையில் நாட்டுவெடிகுண்டுகளை வைத்துவிட்டு, மர்மநபர்கள் வைத்ததாக நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டுக்கொட்டகையில் நாட்டுவெடிகுண்டுகள்... மர்மநபர்கள் வைத்ததாக நாடகமாடியவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்த குண்டோதரன் மகன் சூரியன். இவர் ராயவேலூர் பகுதியில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டில் கொழிஞ்சிபட்டி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஆட்டுக் கொட்டகை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன்கள் முத்துப்பாண்டி, சின்னச்சாமி ஆகியோர்க்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையால் முத்துப்பாண்டியும், சின்னசாமியும் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிய சூரியனின்  ஆட்டுக் கொட்டகையை அடித்து நொருக்கியதாக தெரிகிறது.

அப்போது அங்கு 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர்களை பழிவாங்குவதற்காக சூரியன் என்பவரே ஆட்டுக் கொட்டகையில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது. 

பின்னர் நாட்டு வெடிகுண்டு வைத்து நாடகமாடிய சூரியன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முத்துப்பாண்டி மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.