தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம்.. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!!

தொழிலாளர் தினமான இன்று, தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள்  நடத்தப்படவுள்ளன.

தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம்.. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!!

தமிழகத்தில் கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 விடுமுறை நாட்களில் கூட்டங்கள் நடத்தப்படும் என கூறியிருந்தார்.  அதன்படி தொழிலாளர் தினமான மே 1ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோடை வெப்பம் காரணமாக கிராம சபை கூட்டமானது காலை 10 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகை தரும் மக்கள் பார்வைக்காக  அரசின் பல்வேறு திட்ட பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல், மத்திய- மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்கள், வரவு செலவு விவரங்களும் கிராம சபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராம சபையில் பொது மக்கள் முன்னிலையில் படித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட உள்ளது.