” 'காந்தி ஜெயந்தி' அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்” - தமிழ்நாடு அரசு

அக்டோபர் 2-ஆம் தேதி 'காந்தி ஜெயந்தி' அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காந்தி ஜெயந்தியன்று காலை 11மணியளவில் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டத்தினை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,  தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | "அதிமுகவுடன் விசிக கூட்டணி சேருவதாக சிலர் ஜோசியம் சொல்கின்றனர்" வன்னி அரசு விமர்சனம்!!