ஆன்லைன் தடை சட்டம்: மத்திய அமைச்சரின் பதில்...ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கு அம்பலம்!

ஆன்லைன் தடை சட்டம்: மத்திய அமைச்சரின் பதில்...ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கு அம்பலம்!

ஆன்லைன் ரம்மி தடைச்  சட்டம் குறித்து மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தால் தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கு அம்பலமாகியுள்ளதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்து  தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செய்தி மற்றும் ஒளிப்பரப்புத் துறை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், ஆன்லைன் ரம்மி  சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 7 இல் பட்டியல் 2 இல் 34 ன் படி  மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்...மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

ஆன்லைன் தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மத்திய அரசின் பதில் தொடர்பாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்து மக்களைவையில் விளக்கமளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் , இச்சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு, தெலங்கானா அரசைப் போன்று தமிழ்நாடு அரசும்  உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.