காலம் தாழ்த்தும் ஆளுநர்...நம்பிக்கை உள்ளதாக கூறிய அமைச்சர்...!

காலம் தாழ்த்தும் ஆளுநர்...நம்பிக்கை உள்ளதாக கூறிய அமைச்சர்...!

அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் பொன்முடி:

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர் கல்வித் துறை மண்டல பொறியாளர்கள் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்கக அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறையில் ரூ.422 கோடி மதிப்பீட்டில் 382 கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவற்றின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மாநிலக் கல்லூரியில் 63 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதி  ஆகியவை கட்டுவதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: காலம் தாழ்த்திய ஆளுநர்...கண்டனம் தெரிவிக்கும் டிடிவி!

விரைவில் கட்டுமானப்பணி தொடக்கம்:

மேலும் ராணி மேரி கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 10 அரசு கலைக் கல்லூரிகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நம்பிக்கை உள்ளது:

தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம், துணை வேந்தர்கள் நியமனம் செய்யும் சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு அனுமதி கோரி சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பொன்முடி, ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியான நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.