புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய ஆளுநருக்கு எஸ்.பி.சி.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம்..!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு, எஸ்.பி.சி.எஸ்.எஸ். அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய ஆளுநருக்கு எஸ்.பி.சி.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம்..!

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.பி.சி. எஸ். எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை பரப்பும் தூதராக ஆளுநர் நியமிக்கப்பட்டாரா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி கடமைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும், நீட் தேர்வு உள்ளிட்ட மசோதாக்களை சரியான காரணம் இன்றி நிறுத்தி வைப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை மரியாதை குறைவாக நடத்துவது, கொள்கைப் பிரச்னையில் போதனைகளை வழங்குவது போன்ற செயல்களை ஆளுநர் தொடந்து செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையை ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது  குறித்து அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவற்றை ஆளுநர் படித்துப் பார்க்க முயற்சித்தாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான கூட்டாட்சி அமைப்பை ஆளுநர் அழிக்க முயற்சிக்கிறார் என்றும் ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.