"அரசு சார்பில் கூடுதலாக மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும்......."

"அரசு சார்பில் கூடுதலாக மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும்......."


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விசை படகுகளுக்கு உரிமையாளருக்கு  4.67 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் , ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு மாண்டஸ் புயலில் முழு சேதமடைந்த 76 விசைப்படகுகள், 6 நாட்டுப்படகுகள் மற்றும் பகுதி சேதமடைந்த 136 விசைப்படகுகள், 31 நாட்டுப்படகுகள், 2 இயந்திரங்கள் மற்றும் சேதமடைந்த மீன்பிடி வலைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4.67 கோடியினை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

 மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அவர்கள், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சென்னை மாவட்ட இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் மட்ட அலுவலர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இங்கு மாண்டஸ் புயல் வந்து போது, காலையில் முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருகை தந்ததாகவும், கடந்த ஆண்டு கடுமையான மழை, வெள்ளம் வந்த போதிலும், அந்த பகுதிகளை பார்வையிட்டு தேவையான உதவிகளையும் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலத்தில் விட்டுச்சென்ற  வடசென்னையை உயர்த்தும் வகையில் நலத்திட்டங்களை முதல்வர் செய்து வருவதாகவும், எங்களை அழைத்து மீனவர்களுக்கு  தேவையான நலத்திட்ட உதவிகளும்  அதற்கான பணிகளையும்  செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறினார். 

மேலும், நிவாரண தொகையை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், மீனவர்களுக்கு மீன் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் தடைகளை எல்லாம் தமிழக அரசு நிவர்த்தி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். மீன்பிடி தடை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்ததை திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 6000 ரூபாயாக  முதல்வர் உயர்த்தி வழங்கினார்.

அதோடு, கடலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போனால் அவர்களுக்கான நிவாரணத்தையும், இயற்கை மரணமடைந்த மீனவர்களுக்கு நிவாரணம் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்துக்கு உயர்த்தியவர் முதல்வர்  எனவும், இருப்பவர்களை தூங்க விடாமல் மக்கள் பணிகளை செய்து வருகிறார் என்று அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டி பேசினார்.

இதையடுத்து, மீனவர்களுக்கான நிவாரணத்தை  வழங்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி நடந்து வருவதாகவும், இதனை வழங்குவதற்கான துவக்கத்தை இன்று ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது, 8000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,  நிதி நிலையை பொறுத்து முதல்வர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்றும் கூறினார். மற்றும், டீசல் விலை உயர்வால் மீனவர்களுக்கு சிரமம் ஏற்படுவதால், அரசு சார்பில் கூடுதலாக மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவித்தார். 

 இதையும் படிக்க    } 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி.... அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!