பெருங்குடி குப்பை கிடங்கு தீ விபத்து.. அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு!!

பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிபத்து காரணமாக 2-வது நாளாக புகை வெளியேறி வரும் நிலையில் அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிடங்கை ஆய்வு செய்தனர்.

பெருங்குடி குப்பை கிடங்கு தீ விபத்து.. அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு!!

சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 5 ஆயிரம் டன் குப்பைகள், தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இதில் மீதமுள்ள கழிவுகள் 225 ஏக்கர் பரப்பளவிலான பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று கோடை வெப்பம் காரணமாக மறுசுழற்சி கிடங்கில் தீப்பற்றியது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் கரும்புகை வெளியேறி சுற்றுப்புற பகுதி மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர்.

இந்தநிலையில், 2-வது நாளாக கரும்புகையை கட்டுப்படுத்தி, தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்கு விரைந்த மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தீயணைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, தீயில் கருகி மலைப்போல் தேங்கிக்கிடக்கும் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகை மண்டலத்தை பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

முன்னதாக பெருங்குடி கிடங்கில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்ததாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார் ஆய்வுக்கு பின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.