செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு....

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. 

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு....

இது தொடர்பாக  தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் , பல மாதங்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களின் மனநலன் பாதிக்கக்கூடும் என்றும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஆன்லைன் வகுப்புகள் கிடைக்கப்பெறாமல் மாணவர்கள் தவிப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியதால்  முதல் கட்டமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளை தொடங்க அரசு உத்தேசித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த 50 சதவீதம் மாணவர்களுடன் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றபடுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய அறிவுறுத்த உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட  மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும் என்றும் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.