கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு...11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!!

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு...11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி மாயமானார்.  

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனரான யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியது தெரியவந்தது.

இதற்கிடையில் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

மேலும் கோகுல்ராஜின் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டநிலையில், கொலையில் தொடர்புடைய சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இதனால் இந்த வழக்கை வேறு ஊருக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து இவ்வழக்கை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் உயிரிழந்த நிலையில் யுவராஜ் உட்பட 15 பேர் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான  தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.