விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்து மூன்றாம் நாளான இன்று சிலைகளை கரைக்க சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

கடந்த 10ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா நோய் அச்சம் காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகளை  கரைக்க மூன்றாம் நாளான இன்று நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் வருகை தந்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை பொறுத்தவரையில் இன்று மாலை முதலே பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைக்க வரத் தொடங்கினர்.கொரோனா நோய் பரவல் காரணமாக விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட அனுமதி இல்லாத காரணத்தினால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விநாயகர் சிலைகளை பெற்றுக்கொண்டு காவல் துறையின் உதவியோடு கடலில் கரைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சிலையோடு வரும் பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தபட்டு அங்கேயே கற்பூரம் ஏற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட பிள்ளையர்களை சிறிய வகை வாகனங்களில் ஏற்றி கொண்டு கடற்கரைக்கு சென்று காவல்துறை சேர்ந்தவர்களே வரிசையாக சாலையில் இருந்து கடற்கரை வரை அணிவகுத்து நின்று பிள்ளையார் சிலைகளை கரைத்து வருகின்றனர்.