சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்  :  உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு !!

சென்னையில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளது

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்  :  உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு !!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில்  காவல்துறை அனுமதியுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 

பொது இடங்களில் வைத்து வழிபட்ட இந்த விநாயகர் சிலைகளில் பெரும்பாலான சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.  இதற்காக, பாலவாக்கம் கடற்கரை, பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை ஆகிய 4 இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க  சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  21 ஆயிரத்து 800 காவல் துறையினர் மற்றும் 2 ஆயிரத்து 650 ஊர்க்காவல் படையினர் என 24 ஆயிரத்து 450 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக சிலைகள் கரைக்கப்படும் 4 கடற்கரைகளிலும் காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தபடவுள்ளனர்.

சிலை கரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் 2 மிகப்பெரிய கிரேன்கள் மற்றும் 100 மீட்டர் தூரத்துக்கு சிலைகளை மணற்பரப்பில் கொண்டு செல்வதற்கான ட்ராலிகள் அமைக்கப்பட்டு, 

5 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும்,  ஒவ்வொரு இடத்திலும் ஒரு இணை ஆணையர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது

சிலை கரைக்கும் நாளான இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும்  அதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக இன்று சிலை கரைக்கும் இடத்திலோ அல்லது சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் போதோ  ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சனைக்குரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை, தாம்பரம்  மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.