கெயில் குழாய் பதிக்க அளவீடு .. விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!!

விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கெயில் குழாய் பதிக்க அளவீடு .. விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!!

கேரளாவில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழாய்கள் பதிப்பதற்காக நடைபெற்று வரும் அளவீட்டு பணிகளில்  கடந்த சில நாட்களாக கெயில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாப்பாரப்பட்டி அடுத்த கரியப்பனஅள்ளி கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கான அளவீட்டு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான அளவீடு பணிகள் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி கணேசன், இன்று தனது நிலத்தில் உள்ள மரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரது தற்கொலைக்கு நீதிகேட்டு, அவரது உடலை பாலவாடி அருகேயுள்ள சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல்,  தருமபுரி-பென்னாகரம் சாலையிலும் சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.