உயர்கல்வி படிப்பில் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்... அமைச்சர் பொன்முடி கோரிக்கை...

உயர் கல்வி படிப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் நீக்க வேண்டும்

உயர்கல்வி படிப்பில் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்... அமைச்சர் பொன்முடி கோரிக்கை...

உயர் கல்வி படிப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி. எஸ்.டி. வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், தேசிய சராசரி 27 விழுக்காடு என்ற நிலையில், தமிழகத்தில் 51 புள்ளி 25 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர சேவைகளுக்கு ஜி. எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி பல்கலைக்கழகங்கள் மூலம் தமது கவனத்திற்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி படிப்புகளுக்கு ஜி. எஸ்.டி. வரி விதிப்பது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த நேரிடும் என்றும், உயர்கல்வி சேர்க்கையும் பின்னடைவை சந்திக்கும் எனவும் கூறியுள்ளார். எனவே உயர் கல்வி படிப்புகள் சார்ந்த சேவைகளுக்கு, ஜி. எஸ்.டி. வரி விதித்திருப்பதை முற்றிலும் நீக்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் என, அக்கடிதத்தில் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.