கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த சரக்கு லாரி- ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுகுள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த சரக்கு லாரி- ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் அடுத்த ரெட்டியார் சத்திரத்தில் இருந்து கன்னிவாடி நோக்கி ஈச்சர் சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை ராமலிங்கபட்டியை சேர்ந்த பூமிராஜ்  என்பவர் ஓட்டி வந்துள்ளார். வீரப்புடையான்பட்டியை சேர்ந்த காளிதாஸ் என்பவர்  உடன் அமர்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் சரக்கு லாரி கன்னிவாடி அடுத்த ஆலந்தூரன்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 150- அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதில் லாரியில் பயணம் செய்த காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைகண்ட மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் லாரிக்குள் சிக்கி படுகாயத்துடன் இருந்த ஒட்டுநர் பூமிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் லாரியை கிணற்றில் இருந்து மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.